ADDED : ஜன 17, 2025 07:28 AM

பெங்களூரு: பெங்களூரின், சர்ச் தெருவுக்கு வங்கி ஊழியர் உஜ்வல் என்பவர், கடந்த 10ம் தேதி ஷாப்பிங் வந்திருந்தார். அப்போது சாமியார் வேஷத்தில் இருந்த ஒரு நபர், பிச்சை கேட்டார். உஜ்வல் பிச்சை போட மறுத்தார். இதனால் கோபமடைந்த அவர், உஜ்வல் கையில் போட்டிருந்த 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை உருவி, வாயில் போட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
இது குறித்து, கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் உஜ்வல் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சாலத் திலீப், 35, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது, 'நான் வைர மோதிரத்தை விழுங்கவில்லை. வாயில் ஒளித்து வைத்து கொண்டு தப்பியோடினேன்' என்றார். அவர் வைத்திருந்த வைர மோதிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.