விலகி சென்ற காதலியை 17 முறை குத்தி கொன்ற கள்ளக்காதலன் கைது
விலகி சென்ற காதலியை 17 முறை குத்தி கொன்ற கள்ளக்காதலன் கைது
UPDATED : ஜூன் 10, 2025 12:56 AM
ADDED : ஜூன் 10, 2025 12:56 AM

சுப்பிரமண்யபுரா: கர்நாடகாவின் பெங்களூரு சுப்பிரமண்யபுரா பூர்ணபிரக்யா லே - அவுட்டில் உள்ள, 'ஓயோ' ஹோட்டலில், இம்மாதம் 7ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அந்த ஹோட்டல் ஊழியர்கள், போலீசாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து, ஹோட்டலில் பதிவான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட ஹரிணியுடன் வந்த நபரின் அடையாளம் தெரிந்தது. அவரின் படத்தை, அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த அந்நபரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:
குற்றவாளியின் பெயர் யசஸ், 25. கெங்கேரியை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஹரிணியும், திருவிழா ஒன்றில் சந்தித்துக் கொண்டனர்.
இருவரும் தங்கள் மொபைல் போன் எண்களை பறிமாறிக் கொண்டனர். ஹரிணிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவ்விஷயம் யசசுக்கு தெரியும். அன்று முதல் இருவரும் மொபைல் போனில் பேசியும், நேரில் சந்தித்தும் வந்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு, இவ்விஷயம் ஹரிணியின் கணவர் தாசே கவுடாவுக்கு தெரிய வந்தது. கோபமடைந்த அவர், மனைவிக்கு அறிவுரை கூறி, மொபைல் போனை பறித்து, அவரை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார். தன்னுடன் ஹரிணி பேசாமல் இருந்ததால், யசஸ் கோபத்தில் இருந்தார்.
இம்மாதம் 7ம் தேதி, பூர்ணபிரக்ஞா லே - அவுட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓயோ ஹோட்டலில் அறை எடுத்து ஒன்றாக இருந்தனர். அப்போது, இந்த உறவை நிறுத்திக் கொள்வது குறித்து ஹரிணி பேசியதாக தெரிகிறது.
கோபமடைந்த யசஸ், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கத்தியால், ஹரிணியை 17 முறை குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியதை ஒப்புக்கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.