வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனத்தை திருடியவர் கைது
வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனத்தை திருடியவர் கைது
ADDED : மே 29, 2025 11:51 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஸ்கூட்டரை திருடி தமிழகத்துக்கு திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், புதுச்சேரி (கசபா) போலீஸ் ஸ்டேஷன், ஏ.எஸ்.ஐ., காதர்பாஷா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, பாலக்காடு பகுதியில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற ஸ்கூட்டரை சந்தேகத்தின் பேரில், போலீசார் ஜீப்பில் பின் தொடர்ந்து சென்றனர்.
குருடிக்காடு என்ற பகுதியில் ஸ்கூட்டரை மடக்கி விசாரித்தனர். அதில், ஸ்கூட்டரில் சென்றவர், வாகனத்தை திருடி செல்வது தெரிந்தது. மேலும், அவர், சென்னையை சேர்ந்த கபில்அரசன், 28, என்பதும், ஒலவக்கோடு சாயி சந்திப்பின் அருகே, வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஸ்கூட்டரை தமிழகத்துக்கு திருடி செல்வதும் தெரிந்தது.
திருவனந்தபுரத்தில் இவர் மீது ஏராளமான வாகன திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து, கைது செய்த கபில்அரசனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.