வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து முன்னாள் அமைச்சரை மிரட்டியவர் கைது
வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து முன்னாள் அமைச்சரை மிரட்டியவர் கைது
ADDED : மே 18, 2025 03:17 AM

மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்.,கின் மூத்த தலைவரான சஜ்ஜன் புஜ்பல், அம்மாநிலத்தின் துணை முதல்வராகவும், உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
அவருக்கு கடந்த 2ம் தேதி, மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தன்னை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாசிக் மாவட்டம் திரிம்பகேஷ்வரில் உள்ள புஜ்பலின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அந்த குழுவில் தானும் இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் சோதனையை தவிர்க்கலாம் எனவும் அந்த நபர் கூறினார்.
அதன்பிறகு, தன் உதவியாளரிடம் பேசுமாறு புஜ்பல் கூறியதால், அவரது தனி உதவியாளர் சந்தோஷ் கெய்க்வாட்டை அந்த நபர் தொடர்பு கொண்டு பேசினார்.
சந்தேகமடைந்த சந்தோஷ், நாசிக் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததுடன், மர்ம நபருடனும் தொடர்பிலேயே இருந்தார்.
இவ்வாறு, 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை பல முறை அழைத்த அந்த நபர், முதலில் குஜராத்தின் தரம்பூருக்கு பணத்தை கொண்டு வருமாறு கூறினார்; ஆனால், அவர் வரவில்லை. அதன்பிறகு, நாசிக்கின் பேத் அருகே உள்ள கரஞ்சிலிக்கு வருமாறு மர்ம நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து, குறிப்பிட்ட இடத்துக்கு சந்தோஷ் சென்றார். அந்த இடத்தை போலீசாரும் கண்காணித்தனர். சந்தோஷிடம் பணத்தை வாங்குவதற்காக அந்த நபர் வந்தபோது, போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராகுல் திலீப் பூசாரே, 27, என தெரிந்தது. ராகுலிடம் இருந்து, கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.