புதுச்சேரி தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது!
புதுச்சேரி தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது!
ADDED : டிச 09, 2025 09:07 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று புதுச்சேரியில் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். உப்பளம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து யாரும் வரக்கூடாது, மொத்தம் 5000 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
கரூர் சம்பவத்திற்கு பின்னர் திறந்த வெளி அரங்கில் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கூட்டத்திற்கு வருபவர்களை மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் சோதனை செய்து அனுப்பிக் கொண்டு இருந்தனர். அப்போது வரிசையில் வந்த நபர் ஒருவரை போலீசார் சோதித்தனர். சோதனையில் அந்த குறிப்பிட்ட நபர் கைத்துப்பாக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவரை தனிமைப்படுத்திய போலீசார் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தினர். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கியுடன் வந்தவர், சிவகங்கை மாவட்ட தவெக செயலாளர் பிரபு என்பவரின் தனிப் பாதுகாவலர் டேவிட் என்பது தெரிய வந்தது.
அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். கைத்துப்பாக்கியை எதற்காக எடுத்து வந்தார், அதற்கான உரிமம் முறைப்படி இருக்கிறதா, எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்த விசாரணையில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

