விமானத்தில் தாக்கப்பட்டவர் ரயில் நிலையத்தில் மீட்பு
விமானத்தில் தாக்கப்பட்டவர் ரயில் நிலையத்தில் மீட்பு
ADDED : ஆக 04, 2025 02:32 AM
குவஹாத்தி : விமான பயணத்தின்போது, நடுவானில் சகபயணியால் தாக்கப்பட்ட நபர் மாயமான நிலையில், அசாமின் பார்பெட்டா ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் சச்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹுசைன் அகமது மஜும்தார், 32. இவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார். ஹுசைன் தன் குடும்பத்தினரை காண, அடிக்கடி விமானத்தில் செல்வது வழக்கம்.
இதன்படி, கடந்த ஜூலை 31ம் தேதி மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவுக்கு, 'இண்டிகோ' விமானத்தில் சென்றார்.
அப்போது விமானத்தில் ஏற்பட்ட மோதலில் சக பயணியான ஹபிஜுல் ரஹ்மான் என்பவர் ஹுசைனை தாக்கினார். அப்போது இருவரையும் விமான பணிப்பெண்கள் சமாதானம் செய்தனர்.
கொல்கட்டாவில் தரையிறங்கியதும் ரஹ்மான் போலீசில் ஒப்படைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கொல்கட்டாவில் இருந்து சில்சாருக்கு விமானத்தில் செல்ல வேண்டிய ஹுசைன், அந்த விமானத்தில் செல்லவில்லை. அவருடைய மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அவர் சில்சாருக்கு ரயிலில் செல்வதாக தகவல் கிடைத்தது. அசாமின் பார்பெட்டா ரயில் நிலையத்தில் அவர் மீட்கப்பட்டார்.