'பிரிஜ்'ஜில் வைத்த இறைச்சியை சாப்பிட்டவர் பலி; மூவர் கவலைக்கிடம்
'பிரிஜ்'ஜில் வைத்த இறைச்சியை சாப்பிட்டவர் பலி; மூவர் கவலைக்கிடம்
ADDED : ஜூலை 25, 2025 01:04 AM
ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாதில், 'பிரிஜ்'ஜில் வைத்த இறைச்சியை சாப்பிட்ட அரசு பேருந்து நடத்துநர் பலியான நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் வனஸ்தலிபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் யாதவ், 46; அரசு பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 20ம் தேதி, காளி தேவியை வழிபடும் போனலு பண்டிகையையொட்டி, அவரது வீட்டில் கோழி, ஆட்டிறைச்சி மற்றும் ஆட்டுக்குடல் உள்ளிட்ட அசைவ உணவுகளை சமைத்தனர்.
இந்த உணவை ஸ்ரீனிவாசின் மனைவி, மகள்கள், அவரது தாய் கவுரம்மா, மைத்துனர், அவரது மனைவி, மகள்கள் என மொத்தம் ஒன்பது பேர் சாப்பிட்டனர். மீதமிருந்த உணவை பிரிஜில் வைத்து, அதற்கு அடுத்த நாளும் சூடாக்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, அனைவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒன்பது பேரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி, இரண்டு நாள் கழித்து ஸ்ரீனிவாஸ் யாதவ் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மற்றவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், 'உணவு விஷமாக மாறியதே மரணத்திற்கு காரணம்' என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக வனஸ்தலிபுரம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக வெப்பமான காலநிலையில், மிச்சமான இறைச்சி மற்றும் அழுகக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

