நண்பர்களுக்கு விருந்து வைத்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
நண்பர்களுக்கு விருந்து வைத்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : செப் 14, 2025 11:04 PM
புதுடில்லி:ஹோட்டல் அறையில் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். நண்பர்கள் மதுவில் விஷம் கலந்து கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
டில்லி பிரம்மபுரியைச் சேர்ந்தவர் மோஹித் கார்க். வடகிழக்கு டில்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் காலை அறை எடுத்து தங்கினார். மாலையில், நண்பர்களுக்கு அதே அறையில் மது விருந்து அளித்தார்.
போதையில் நண்பர்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்த போது, திடீரென மோஹித் மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், மயங்கிக் கிடந்த மோஹித்தை, அருகில் உள்ள ஜெ.பி.சி., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், மோஹித் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக, ஜி.டி.பி., அரசு மருத்துவமனைக்கு மோஹித் உடலை அனுப்பினர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மோஹித் தந்தை நரேந்தர் குமார் கார்க் கூறியதாவது:
தகவல் அறிந்தவுடன் குடும்பத்தினர் உடனடியாக ஹோட்டலுக்கு வந்து, மோஹித்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போதே, மோஹித் உடல் நீலநிறமாக இருந்தது.
போலீசார் சரியான நேரத்துக்கு வரவில்லை. நண்பர்கள் மதுவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகப் படுகிறேன்.
போலீசார் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகன் ஆரோக்யமாக இருந்தான். அவனுக்கு எந்த உடல்நல பிரச்னையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மோஹித்தின் குடும்ப நண்பர் விகாஸ் ஜெயின் கூறுகையில், “நாங்கள் சென்ற போது மயங்கிக் கிடந்த மோஹித் உடல் நீல நிறமாக இருந்தது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு நாங்கள்தான் கொண்டு சென்றோம்.
''பரிசோதித்த டாக்டர்கள் மோஹித் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதன் பிறகு தான் போலீஸ் வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்,” என்றார்.
ஹோட்டல் அறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோஹித் நண்பர்களிடம் விசாரணை நடக்கிறது.