பிரதமர் அலுவலக அதிகாரி என நாடகம்; ஐ.என்.எஸ்., போர்க்கப்பல் விவரம் கேட்ட கேரள நபர் கைது
பிரதமர் அலுவலக அதிகாரி என நாடகம்; ஐ.என்.எஸ்., போர்க்கப்பல் விவரம் கேட்ட கேரள நபர் கைது
UPDATED : மே 13, 2025 01:40 PM
ADDED : மே 12, 2025 07:18 PM

கொச்சி; பிரதமர் அலுவலக அதிகாரி பேசுவதாக கூறி, தொலைபேசி மூலம் ஐ.என்.எஸ்., விக்ராந்த் பற்றிய தகவல்களை சேகரிக்க முயன்ற நபர் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கொச்சியில் உள்ள கடற்படை தளத்தின் தொலைபேசிக்கு ஒருவர் பேசி உள்ளார். தம்மை ராகவன் என்றும், பிரதமர் அலுவலக அதிகாரி என்றும் கூறி இருக்கிறார்.
பின்னர் ஐ.என்.எஸ்., விக்ராந்த் (இதுஒரு விமானம்தாங்கி போர்க்கப்பல்) இருப்பிடம், எங்கே உள்ளது என்பன பற்றிய விவரங்களை தருமாறு கேட்டுள்ளார். அவரின் இந்த திடீர் பேச்சின் மீது சந்தேகம் கொண்ட கடற்படை தள அதிகாரிகள், உடனடியாக காவல்துறை உதவியை நாடினர்.
இதையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் ராகவன் என்ற பெயரில் பேசிய நபரை கைது செய்தனர். இவர் கோழிக்கோடு அருகே உள்ள நடக்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட அவர், கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரின் பெயர் முஜிப் ரஹ்மான் என்பது தெரிய வர, தொடர்ந்து கடற்படை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கொச்சி போலீஸ் எஸ்.பி., விமலாதித்யா கூறுகையில், ''பிடிபட்ட நபர், யாருக்காக இந்த தகவல்களை விசாரித்தார். வெளிநாட்டு உளவு அமைப்புடன் அவருக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பது பற்றி விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது,'' என்றார்.