ADDED : ஜூலை 20, 2025 10:52 PM
புதுடில்லி:மத்திய டில்லி, பழைய ராஜிந்தர் நகரில் தங்கி, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக்கு படித்து வந்தவர், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றிவிசாரித்து வருகின்றனர்.
ஜம்முவைச் சேர்ந்தவர் தருண் தாக்குர்,25. மத்திய டில்லி பழைய ராஜிந்தர் நகரில் வாடகை வீட்டில் தங்கி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக்கு படித்து வந்தார்.
நேற்று முன் தினம் காலையில் இருந்து பல முறை, அவரது தந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், போனை எடுக்கவில்லை.
இதையடுத்து, மாலையில் வீட்டு உரிமையாளரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் சென்று ஜன்னல் வழியாகப் பார்த்த போது, தருண் துாக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், அறைக் கதவை உடைத்து, தருண் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவரது மொபைல் போன் மற்றும் தருண் எழுதி வைத்திருந்த கடிதம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.