மனுக்களே மாலை; ஜோக்கர் பட ஸ்டைல்! கலெக்டர் ஆபீசில் உருண்டு புரண்ட மனுதாரர்!
மனுக்களே மாலை; ஜோக்கர் பட ஸ்டைல்! கலெக்டர் ஆபீசில் உருண்டு புரண்ட மனுதாரர்!
ADDED : செப் 04, 2024 10:01 AM

போபால்; போபால் அருகே புகார் மனுக்களை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒருவர் உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் பிரஜாபதி என்பவர் தமது ஊரின் பஞ்சாயத்து தலைவர் கன்கர்யா என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி புகார் மனுக்களை அளித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியபடியே இருந்திருக்கிறார்.
தினுசான ஐடியா
அவரின் புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. என்ன செய்தால் நடவடிக்கை பாயும் என்று யோசித்தவருக்கு தினுசாக ஒரு ஐடியா தோன்றி இருக்கிறது. இதுவரை தான் அளித்த மனுக்களின் நகல்களை ஒரு மாலை போல தொடுத்து இருக்கிறார்.
மனுக்களுடன் உருட்டு
பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாளில் அங்கு சென்று உள்ளார். அங்கு அவர் செய்த காரியம் தான் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. கலெக்டர் அலுவலக வளாக வாசலில் மேல் சட்டையை கழற்றியபடி வந்த அவர், முழங்கையை மடக்கி தவழ்ந்து வந்தார். அவரது கழுத்து முழுவதும் இதுவரை தான் அனுப்பிய அத்தனை மனுக்களையும் ஒரு மாலையாக கட்டி அணிந்தபடி உருண்டபடியே நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
உத்தரவு
இதைக்கண்ட அதிகாரிகள் திகைத்து நிற்க ஒரு சிலர் அலுவலகத்தின் உள்ளே இருந்து வெளியே வந்து என்ன இது என்று புரியாமல் குழம்பி போயினர். இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட, மனுக்கள் மீது உடனடியாக மறு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அவர் உத்தரவிட்டு உள்ளார்.