ஆமதாபாத் நீதிபதி மீது செருப்பு வீச்சு; நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
ஆமதாபாத் நீதிபதி மீது செருப்பு வீச்சு; நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
ADDED : அக் 15, 2025 05:32 PM

ஆமதாபாத்: குஜராத்தில் வழக்கு விசாரணையின் போது ஆமதாபாத் மாவட்ட நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1997ம் ஆண்டு குஜராத்தின் கோம்திபூரைச் சேர்ந்த நபர் மார்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அடித்த பந்து, இந்த நபரின் மீது பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
எனவே, இது தொடர்பாக 4 பேர் மீது நீதிமன்றத்தில் அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். 2009ம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 2017ம் ஆண்டு பிப்., 15ம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து, 2017 மே 19ம் தேதி ஆமதாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த 13ம் தேதி தீர்ப்பை வெளியிட்டது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை விடுதலை செய்யும் கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடியும் செய்தது.
இதனால், ஆத்திரமடைந்த மனுதாரர், தீர்ப்பு வாசிக்கும் போது, தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி, நீதிபதி மீது வீசியுள்ளார்.மேலும், நீதிமன்றத்தில் அநாகரிகமாகவும் நடந்து கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை நீதிமன்ற ஊழியர்கள் பிடித்தனர். அப்போது, அந்த நபரை விடுவிக்கச் சொன்னதுடன், எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிபதி கேட்டுக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது செருப்பு வீசப்பட்ட நிலையில், தற்போது, ஆமதாபாத் நீதிமன்ற நீதிபதி மீது செருப்பு வீசியது நீதித்துறையினரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.