ADDED : மே 11, 2025 11:37 PM
மூணாறு; வன உற்பத்தி பொருட்களை சேகரிக்க நண்பர்களுடன் சென்ற போது வனத்தினுள் சிக்கியவரை ஐந்து நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார்.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கரிமண்ணுார் உப்புகுன்னு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜீவ் 45, மனு, பிரசாத். நண்பர்களான இவர்கள், வன உற்பத்திப் பொருட்களை சேகரிக்க மே 6ல் குளமாவ் வனப் பகுதிக்குச் சென்றனர்.
வனத்தினுள் மூவரும் தனித்தனியாக பொருட்களை சேகரிக்கச் சென்றனர்.
இந்நிலையில் பொருட்களை சேகரித்து விட்டு, வீடு திரும்பிய மனு, பிரசாத் ஆகியோர் மே 10ல் ராஜீவை தேடி சென்றபோது, அவர் வீடு திரும்பவில்லை என, தெரியவந்தது.
கரிமண்ணுார் போலீசில் ராஜீவின் தந்தை புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஷ்ணுகுமார் தலைமையில் போலீசார், குளமாவ் வனத்துறை அதிகாரி சந்தோஷ் தலைமையில் வனக்காவலர்கள் ஆகியோர் வனத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில் இடுக்கி, தொடுபுழா மாநில நெடுஞ்சாலையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் வனத்தினுள் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ராஜீவை கண்டு பிடித்தனர். அவரை மீட்டு இடுக்கி மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என இன்ஸ்பெக்டர் விஷ்ணுகுமார் தெரிவித்தார்.