எட்டு வழக்குகளில் தேடப்பட்டவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
எட்டு வழக்குகளில் தேடப்பட்டவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
ADDED : ஜூன் 24, 2025 07:53 PM
புதுடில்லி:கொலை மற்றும் சட்டவிரோத ஆயுத விற்பனை வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளி, ஹரியானா எல்லையில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்தவர் ரோமில் வோரா. யமுனாநகரில் நடந்த மூன்று கொலைகள், குருக்ஷேத்ராவில் ஒரு கொலை மற்றும் சட்டவிரோத ஆயுத விற்பனை என, எட்டு வழக்குகளில், ரோமில் வோராவை, ஹரியானா மற்றும் டில்லி போலீசார் தேடி வந்தனர். ரோமில் வோரா குறித்து தகவல் தருவோருக்கு, மூன்று லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக, ஹரியானா போலீஸ் அறிவித்தது.
இந்நிலையில், டில்லியில் ஒருவரை கொலை செய்ய, ரோமில் வோரா திட்டமிட்டு இருப்பதாக, போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கிஷன்கர் போலீஸ், டில்லி மற்றும் ஹரியானா மாநில சிறப்புப் படையினர், டில்லி - -ஹரியானா எல்லையில், நேற்று முன் தினம் இரவு முகாமிட்டனர்.
நேற்று அதிகாலை, அந்த வழியாக ரோமில் வோராவை சுற்றிவளைத்தனர். ஆனால், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்கள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். போலீஸ் கொடுத்த பதிலடியில், ரோமில் வோராவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த வோரா, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், ரோமில் வோரா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். காயம் அடைந்த இரு சப் - இன்ஸ்பெக்டர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் பிரிவு கூடுதல் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வா, “ஹரியானாவில் நடந்த கொலைகளுக்கு, சமீபத்தில் பாங்காக்கில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள தாதா வீரேந்தர் பிரதாப் என்ற காலா ராணா மற்றும் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அவரது சகோதரர் சூர்யா பிரதாப் என்ற நோனி ராணா ஆகியோர், ரோமிலுக்கு உத்தரவிட்டதாக தெரிய வந்துள்ளது'என்றார். போலீஸ் என்கவுன்ட்டர் மரணம் தொடர்பான சட்ட நடைமுறைகள் துவங்கியுள்ளன.