கொலை வழக்கில் தேடப்பட்டவர் 11 ஆண்டுக்கு பின் பிடிபட்டார்
கொலை வழக்கில் தேடப்பட்டவர் 11 ஆண்டுக்கு பின் பிடிபட்டார்
ADDED : அக் 12, 2024 10:42 PM
புதுடில்லி:கொலை வழக்கில் தேடப்பட்டவர், 11 ஆண்டுகளுக்குப் பின் ஜார்க்கண்ட் வனப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி திலக் நகரைச் சேர்ந்த ஜிதேந்தர் லம்பாவுக்கும் அவருடைய சகோதரர் ராஜேஷ் சிங் லம்பாவுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்தது. கடந்த 2013ல் தன் சகோதரரை கொலை செய்ய ராஜு பனாரசி என்ற ராஜு சிங் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
ராஜூ சிங் தலைமையில் 6 பேர், ஜிதேந்தர் லம்பாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். கொலையை நிறைவேற்றியதும் ராஜூ சிங் தப்பி விட்டார். மற்ற 5 பேரும் போலீசில் பிடிபட்டனர்.
இந்த வழக்கில் ராஜூ சிங்கை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்தது.
இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 11 ஆண்டுகளாக பல தேடுதல் வேட்டைகளை நடத்தினர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் 10 ஆண்டுகளாக தொடர்பு கொண்ட நூற்றுக்கணக்கான மொபைல் எண்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
ராஜூ சிங்கின் உறவினருடைய மொபைல் போன் எண், ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எண்ணின் இருப்பிடம் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் தொடர்ந்து காண்பித்தது.
டில்லி மாநகரப் போலீசின் தனிப்படையினர், உள்ளூர் போலீஸ் உதவியுடன் ஜார்க்கண்ட் மாநில வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையை துவக்கியது. காட்டில் லாரியை ஓட்டி வந்த ராஜூ சிங்கை,50, போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கொலை வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளியை தேடிப் பிடித்து கைது செய்த தனிப்படையினரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.