ADDED : ஜூலை 14, 2025 03:22 AM
புதுடில்லி:கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கில், ஓராண்டாக தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி பாபா ஹரிதாஸ் நகரைச் சேர்ந்தவர் கிசான் மூரத்,45. மின் வினியோக நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றினார்.
தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நகை வியாபாரி தர்ஷனை காரில் கடத்திச் சென்று, நகை மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு அவரை நடுவழியில் இறக்கி விட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நங்லோய் போலீசார், மூரத்தின் நண்பர்கள் மூன்று பேரை கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான கிசான் மூரத், தனிப்படை போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டார்.
உத்தர பிரதேசம், பீஹார் தன் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார். டில்லி மாநகரப் போலீசின் தொழில்நுட்ப கண்காணிப்புப் பிரிவினர் உதவியுடன், பாபா ஹரிதாஸ் நகருக்கு மூரத் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த, 11ம் தேதி தனிப்படை போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி, கிசான் மூரத்தை கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.