ஆன்லைனில் முதலீடு செய்யச்சொல்லி மோசடி; ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.1 கோடி ஏமாற்றியவருக்கு வலை
ஆன்லைனில் முதலீடு செய்யச்சொல்லி மோசடி; ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.1 கோடி ஏமாற்றியவருக்கு வலை
ADDED : பிப் 14, 2025 08:55 PM

புதுடில்லி: முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, டில்லியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.1.2 கோடி மோசடி செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சமீபகாலமாக ஆன்லைன் வாயிலாக பொதுமக்களிடம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மோசடி, முதலீடு செய்தால் அதிக வருமானம் எனக்கூறி மோசடி நடக்கிறது. இதில் முதியவர்கள் மட்டுமில்லாமல், நடுத்தர வயதினரும் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர்.
அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், மறுபுறம் மோசடி நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், டில்லியின் சதாரா பகுதியில் வசித்து வரும் 61 வயதான ஓய்வு பெற்ற அரசு பெண் அதிகாரியிடம் ரூ.1.2 கோடி மோசடி நடந்துள்ளது. அவரிடம் 'பேஸ்புக்' பக்கத்தில், மோசடி நபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நண்பராக இணைந்துள்ளார். அந்த இணையதளத்தில் அவர் அடிக்கடி செய்தி அனுப்பி வந்தார்.
இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டதும், அந்த மோசடி நபர் தான் பிரிட்டனில் ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யும் நபர் தான் எனவும், எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறியுள்ளார். தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக லாபம் பார்த்து வருவதாகவும், அதேபோல் லாபம் கிடைக்க உதவி செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதன் பிறகு அந்த மோசடி நபர், வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். பிறகு தனது நிறுவனத்தின் இணையதள முகவரி என போலி முகவரி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், அந்த பெண் அதிகாரி, மோசடி நபர் கூறியபடி விண்ணப்பித்து தனது சேமிப்பு பணம் முழுவதையும் அதில் மாற்றி உள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.1 கோடி வரை கொடுத்துள்ளார்.
இதன பிறகு சில நாட்களுக்கு பிறகு அவரது கணக்கில் அதிக பணம் இருப்பதாக காட்டிஉள்ளது. இதனையடுத்து அந்தப் பணத்தை எடுக்க அவர் முயற்சி செய்தார். ஆனால், அதில் பல தடை ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மோசடி நபரை, பெண் அதிகாரி தொடர்பு கொண்டார்.
அதற்கு அந்த மோசடி நபர், விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த காரணத்தினால், அவருக்கான புள்ளிகள் குறைந்துவிட்டதாகவும், இதனை சரி செய்ய ரூ.35 லட்சம் செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கூடுதலாக 20 லட்சம் வரை பணம் அனுப்பி உள்ளார். இதன் பிறகும் அவரது பணத்தை எடுக்க முடியவில்லை.
சந்தேகம் அடைந்த அந்த பெண் அதிகாரி, பிரிட்டனில் உள்ள தனது நண்பரிடம் இது குறித்து விசாரித்து உள்ளார். அவர் விசாரித்த போது தான், பெண் அதிகாரி ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.