ரூ.89 லட்சம் மோசடி செய்தவர் 2 ஆண்டுக்கு பின் பிடிபட்டார்
ரூ.89 லட்சம் மோசடி செய்தவர் 2 ஆண்டுக்கு பின் பிடிபட்டார்
ADDED : ஜூன் 13, 2025 08:31 PM
புதுடில்லி,:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம், 89 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மஹாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி ஜனக்புரியில், 'பிசா பிளேஸ்மென்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை ஜாகிர் தாவுத் கான், 38, மற்றும் அவரது கூட்டாளிகள் அர்ஷத், ராம் அன்மோல் தாக்குர், குல்பர் அலி, ஸ்ருதி, முஹமது சதாம், முஹமது தஸ்லீம் ஆகியோர் நடத்தினர். வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியை இந்த நிறுவனம் செய்து வந்தது.
துபாயில் வேலை வாங்கித் தருவதாக டில்லி, உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பலரிடம், 50,000 ரூபாய் முதல் 1,20,000 வரை பலரிடம், 88.8 லட்சம் ரூபாய் வசூலித்தனர். டில்லியைச் சேர்ந்த தர்மேந்திர குமார் என்பவரிடம், 90,000 ரூபாய் வசூலித்த இந்த நிறுவனம், விமான டிக்கெட் மற்றும் வேலைக்கான உத்தரவு ஆகியவற்றை, 2022ம் ஆண்டு செப்டம்பரில் வழங்கியது. அவர் விமான நிலையம் சென்ற போது விசா, விமான டிக்கெட் ஆகியவை போலி என தெரிய வந்தது. இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் பொருளாதாரக் குற்றப் பிரிவில், தர்மேந்திர குமார் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து டில்லி, உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் புகார் மனு கொடுத்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், 2022ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, ஜாகிர் தாவுத் கான் உள்ளிட்டோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், வெளியுறவு அமைச்சக இல்லாமல், வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பு நிறுவனம் நடத்தியது தெரிய வந்தது. ஏற்கனவே, 59க்கும் மேற்பட்டோருக்கு போலி விசா, 364 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அர்ஷத், ராம் அன்மோல் தாக்கூர், குல்பர் அலி மற்றும் ஸ்ருதி ஆகிய நான்கு பேரும், 2022ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், முஹமது சதாம் மற்றும் முஹமது தஸ்லீம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஜாகிர் தாவுத் கான் தலைமறைவானார். இதையடுத்து, 2024ம் ஆண்டு பிப்ரவரியில் அவர் தலைமறைவு குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, ஜாகிர் தாவுத் கான் குறித்து தகவல் தருவோருக்கு, 50,000 ரூபாய் பரிசை டில்லி போலீஸ் அறிவித்தது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே துபாய்க்கு தப்பிச் சென்ற ஜாகிர், இந்த ஆண்டு துவக்கத்தில் நாடு திரும்பினார். அவரது நிதி பரிவர்த்தனை மற்றும் அவருடைய நடமாட்டம் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. மஹாராஷ்டிர மாநிலம் பட்கா அருகே ஒரு கிராமத்தில் தங்கியிருந்த ஜாகிர் தாவுத் கான், 10ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணை நடக்கிறது.