கர்ப்பிணி மனைவி உட்பட 4 பேரை கொன்றவருக்கு ' துாக்கு '
கர்ப்பிணி மனைவி உட்பட 4 பேரை கொன்றவருக்கு ' துாக்கு '
ADDED : நவ 28, 2024 05:25 AM

மைசூரு: நிறைமாத கர்ப்பிணி மனைவி உட்பட நான்கு பேரை கொலை செய்தவருக்கு துாக்கு தண்டனை விதித்து, மைசூரு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மைசூரு, ஹெச்.டி.கோட்டேவின், சாமேகவுடனஹுன்டி கிராமத்தில் வசித்தவர் கங்கா, 30. இவரது கணவர் மணிகண்டசாமி, 35. தம்பதிக்கு நான்கு வயது மற்றும் ஒன்றரை வயதில், இரண்டு மகன்கள் இருந்தனர். கங்கா ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
மணிகண்டசாமி மாற்றுத்திறனாளி. கங்காவுக்கு வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு இருப்பதாக மணிகண்டசாமி சந்தேகித்தார். தினமும் தகராறு செய்தார்; அடிக்கவும் செய்தார்.
கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி இரவு, அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கங்கா, இரண்டு மகன்கள், தாய் கெஞ்சம்மா, 60, ஆகியோரை கட்டையால் அடித்து மணிகண்டசாமி கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த சரகூரு போலீசார், மணிகண்டசாமியை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையை முடித்து, மைசூரின் 5வது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு துாக்கு தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி குருராஜ் சோமக்கலவர், நேற்று மதியம் தீர்ப்பளித்தார்.
கொலையான கங்காவின் பெற்றோருக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி, மாவட்ட சட்டசேவைகள் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.