ADDED : ஏப் 11, 2025 04:09 AM

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் பரண் என்ற மாவட்டம் உருவாக்கப்பட்டதன், 35வது ஆண்டு தினம் நேற்று நடந்தது. இதை விமரிசையாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது; பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் ஒன்றாக, சூடான காற்று நிரம்பிய பலுானை, வானில் பறக்க விட முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை தனியார் நிறுவனம் செய்தது.
வசுதேவ் காத்ரி என்ற நபர், தரையில் நின்றபடி, வானில் பறக்க விடப்பட்ட பலுானை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, பலுானை கட்டி இருந்த கயிறு திடீரென அந்த நபரை சுற்றியது; 100 அடி உயரத்திற்கு துாக்கியது.
திடீரென காற்றில் பறந்த அந்த நபர் அலறினார். அப்போது, திடீரென கயிறு அறுந்து, 100 அடி உயரத்திலிருந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை, மருத்துவமனைக்கு உடனே துாக்கி சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இந்த துக்க நிகழ்வை அடுத்து, பரண் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட நாள் கொண்டாட்டங்களை நிறுத்தி, கலெக்டர் ரோஹிதாஷ் சிங் தோமர் உத்தரவிட்டுள்ளார்.

