ADDED : அக் 24, 2025 02:17 AM
புதுடில்லி:பள்ளி சிறுமியை பின்தொடர்ந்த சிறுவனை தட்டிக் கேட்ட சிறுமியின் உறவினரை, அந்த சிறுவன் கத்தியால் குத்திக் கொன்றான். தலைமறைவாகியுள்ள அவனை பிடிக்க போலீசார், தனிப்படை அமைத்துள்ளனர்.
அவுட்டர் டில்லியின் ரனோலா என்ற இடத்தில் உள்ள ஒரு சிறுமி, பள்ளிக்கு செல்லும் வழியிலும், டியூஷன் படிக்க செல்லும் இடத்திலும் பின்தொடர்ந்து, தொந்தரவு செய்து வந்தான், 17 வயது சிறுவன் ஒருவன்.
நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு அந்த சிறுவன், விகாஸ் குஞ்ச் பகுதியில் உள்ள அந்த சிறுமியின் வீடு முன் உலாவி கொண்டிருந்தான்.
பல மாதங்களாக அந்த சிறுமியை, காதலிக்க கூறி, அந்த சிறுவன் தொந்தரவு செய்து வந்தான். இதனால், அந்த சிறுவன் மீது இரண்டு மாதங்களுக்கு முன், சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கூறினர்.
அதையடுத்து, 'இனிமேல் அந்த சிறுமியை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்' என அந்த சிறுவன் எழுதிக் கொடுத்திருந்தான். அந்த உறுதியை மீறி, அந்த சிறுமி வீடு முன் அவன் உலாவியதை கண்ட, அந்த சிறுமியின் தாய், அவனை கண்டித்தார். அதையடுத்து, அந்த பெண் மீது, அந்த சிறுவன் தாக்குதல் நடத்தினான்.
இதை கண்ட, அந்த சிறுமியின் உறவுக்காரரான, 28 வயது நபர், அந்த சிறுவனை நேற்று முன்தினம் தட்டிக் கேட்டார்.
அதையடுத்து, அவர் மீது கோபம் கொண்ட அந்த சிறுவன், கத்தியால் அந்த இளைஞரை மார்பில் பல முறை குத்தினான். இதில், படுகாயம் அடைந்த அவர், அங்கேயே மயங்கி விழுந்து, இறந்தார்.
இதையடுத்து, அந்த சிறுவன் அங்கிருந்து தப்பினான். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள அந்த சிறுவனை தேடி வருகின்றனர்.

