மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு சபரிமலை கோவில் நடை அடைப்பு
மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு சபரிமலை கோவில் நடை அடைப்பு
ADDED : ஜன 21, 2025 12:41 AM

சபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது.
மண்டல பூஜை, கடந்த டிச., 26ல் நிறைவடைந்தது. மூன்று நாட்களுக்குப்பின் டிச., 30ல் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக கோவில் நடை பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடந்தது.
பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 18ல் மகரவிளக்கு கால பூஜை நிறைவடைந்த நிலையில், பக்தர்கள் தரிசனமும் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது.
நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது.
அதன்பின் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அய்யப்ப விக்ரகத்தில் விபூதி பூசி, அய்யப்பனை தவக்கோலத்தில் இருத்தி, ஹரிவராசனம் பாடி கோவில் நடையை சாத்தினார். கோவில் நடை சாவியை, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைத்தார்.
இதேபோல் மகரஜோதியின் போது, அய்யப்பனுக்கு அணிவிக்க கொண்டு வரப்பட்ட திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி, 18ம் படி வழியாக கீழே இறக்கி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.