ADDED : ஜன 01, 2025 12:51 AM

குமாரசாமி - ஐ.பி.எஸ்., மோதல்
மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி. இவர் கடந்த 2006 ல் முதல்வராக இருந்த போது சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கிய வழக்கில் விசாரணை நடத்த அனுமதிக்கும்படி, ஐ.பி.எஸ்., அதிகாரியும், லோக் ஆயுக்தா ஐ.ஜி.,யுமான சந்திரசேகர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதம் வெளியானதால், கவர்னர் அலுவலக ஊழியர்களிடம் விசாரிக்க அனுமதி கேட்டு, மூத்த அதிகாரிக்கு, சந்திரசேகர் கடிதம் எழுதினார். இதனால் சந்திரசேகர் மீது குமாரசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பதிலுக்கு குமாரசாமியை பன்றி என்று சந்திரசேகர் விமர்சித்தார். தன்னை மிரட்டியதாக குமாரசாமி, அவரது மகன் நிகில் மீது, சந்திரசேகர் போலீசிலும் புகார் செய்தார்.
யஷ் ரசிகர்கள் 4 பேர் பலி
கன்னட நடிகர் யஷ்க்கு பிறந்தநாளுக்கு, கட் அவுட் கட்டிய போது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள், கடந்த ஜனவரி 8ம் தேதி பலியாகினர். அவர்கள் குடும்பத்திற்கு யஷ் நேரில் ஆறுதல். தலா 5 லட்சம் நிதி உதவி. ஆறுதல் கூறிவிட்டு அவர் திரும்பிய போது, காரை பின்தொடர்ந்து சென்ற இன்னொரு ரசிகர் விபத்தில் சிக்கி பலி.
4 பேர் கொலை
கதக் பெண்டிகேரி நகராட்சி துணை தலைவர் சுனந்தா உட்பட அவரது குடும்பத்தில் நான்கு பேர், கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொலை.
எம்.எல்.ஏ.,வுக்கு சிறை
கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல். கார்வார் பெலகேரி துறைமுகத்தில் இருந்து தாது மணல் கடத்திய வழக்கில், சதீஷ் சைல் மீது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கடந்த அக்டோபர் 27 ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. சதீஷ் சைலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இளம் டி.எஸ்.பி., மரணம்
மத்திய பிரதேச மாநிலம், சிங்ரவுலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்ஷ பர்தன், 35. இளம் ஐ.பி.எஸ்., ஆன இவர் கர்நாடக கேடர் அதிகாரி ஆவார். பயிற்சி முடித்து விட்டு, ஹாசன் டி.எஸ்.பி., யாக பதவியேற்க சென்ற போது, டிசம்பர் 1 ம் தேதி விபத்தில் சிக்கி இறந்தார்.
ஹனுமன் கொடி பிரச்னை
மாண்டியாவின் கெரேகோடு கிராமத்தில் கடந்த ஜனவரியில், கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹனுமன் கொடியுடன் கூடிய கம்பம் அமைக்கப்பட்டது. அந்த கொடி இறக்கப்பட்டு, தேசிய கொடி ஏற்றப்பட்டதால் சர்ச்சை உண்டானது. ஹிந்துக்கள் மீதான கோபத்தால் ஹனுமன் கொடி இறக்கப்பட்டதாக பா.ஜ., குற்றம் சாட்டியது. மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகாவை கண்டித்து பெரிய அளவில் போராட்டம்நடந்தது.
விநாயகர் ஊர்வலத்தில் கலவரம்
மாண்டியா நாகமங்களாவில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி இரவு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இரு சமூகத்தினர் இடையில் ஏற்பட்ட மோதலால் கலவரம் நடந்தது. கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வழக்கில் 55 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அடித்து செல்லப்பட்ட கேட்
விஜயநகரா - கொப்பால் மாவட்ட எல்லையில் முனிராபாத்தில் உள்ள, துங்கபத்ரா அணை தென்மேற்கு பருவமழையால் நிரம்பியது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இரவு, அணையின் 19வது மதகின் கேட் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. கேட் இல்லாத மதகு வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் நான்கு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டது. விவசாயிகள் கவலை அடைந்தனர். ஒரு வழியாக ஆகஸ்ட் 16ம் தேதி தற்காலிக கேட் பொருத்தப்பட்டது. ஆனாலும் அணையில் இருந்து 33 டி.எம்.சி., தண்ணீர் வீணாக வெளியேறியது.

