ADDED : ஜன 17, 2025 07:21 AM

டில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வரும் சர்வதேச கோகோ விளையாட்டு போட்டிகளில், மாண்டியாவை சேர்ந்த மாணவியர் சிறப்பாக விளையாடுகின்றனர்.
டில்லியின் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், கோகோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், முதன் முறையாக சர்வதேச கோகோ உலக கோப்பை விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஜனவரி 13ம் தேதி துவங்கிய இப்போட்டிகள், 19ம் தேதி வரை நடக்கவுள்ளன.
மாண்டியாவின் விவசாயிகளின் பிள்ளைகள், இப்போட்டிகளில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்துகின்றனர். 20 நாடுகள் பங்கேற்றுள்ளன.
மாண்டியா, பாண்டவபுராவில் வசிக்கும் சைத்ரா, மோனிகா கோகோ விளையாட்டில் பங்கேற்றுள்ளனர். இருவரும் பாண்டவபுராவின், ஜெயந்தி நகரில் உள்ள சம்பு லிங்கேஸ்வரா பிசிக்கல் எஜுகேஷன் கல்லுாரி மாணவியராவர்.
சைத்ரா இரண்டாவது ஆண்டு பி.பி.இ.எட்., மோனிகா முதலாம் ஆண்டு பி.பி.இ.எட்., படிக்கின்றனர்.
இரண்டு மாணவியரும் பல ஆண்டுகளாக கோகோ விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். சைத்ரா ஏற்கனவே கர்நாடகாவில் நடந்த 30 க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்.
இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, கடுமையான பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் கோகோ விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி சார்பில் விளையாடுகின்றனர்.
இரண்டு மாணவியரும், விவசாயிகளின் மகள்கள். இவர்கள் இந்தியா சார்பில் விளையாடுவதால், மாண்டியா மக்கள் குஷி அடைந்துள்ளனர் - நமது நிருபர் -.