முதலமடையில் மாம்பழ சீசன் துவக்கம்; காலநிலை மாறுவதால் பாதிப்பு
முதலமடையில் மாம்பழ சீசன் துவக்கம்; காலநிலை மாறுவதால் பாதிப்பு
ADDED : ஜன 21, 2025 11:49 PM

- நமது நிருபர் -
பாலக்காடு அருகே, முதலமடையில் மாம்பழ சீசன் துவங்கியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தமிழக எல்லையில் பொள்ளாச்சி அருகே உள்ளது முதலமடை. கேரளாவின் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படும் இங்கு, மாம்பழ சீசன் துவங்கியுள்ளது.
கடந்த, 2018க்கு இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகம் இருக்கும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இங்கு, நான்காயிரம் ஹெக்டேர் பரப்பில் மா பயிரிடப்பட்டு உள்ளது. இதில், முதலமடையில் மட்டும், 70 சதவீதத்துக்கு அதிகமான மாந்தோப்புகளில் மாமரங்கள் பூ பூத்துள்ளன. காலநிலை மாற்றத்தால் சில பகுதிகளில் பூக்கள் உதிர்ந்தாலும், மீண்டும் பூக்கள் பூத்துள்ளன.
முதலமடையில் மட்டும், இரண்டாயிரத்திற்கும் மேலான விவசாயிகள் மா சாகுபடியை நம்பி உள்ளனர். கடந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் பாதிப்பு காரணமாக, 500 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் குறைந்தது.
விவசாயி ஷைஜு கூறியதாவது: முதலமடை மாங்காய்க்கு எப்போதுமே மவுசு அதிகம். அதனால், அதிக விலை கிடைக்கிறது. இது, விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நம்பிக்கை அளிக்கிறது. 'அல்போன்சா' மாங்காய் கிலோ 200 - -220 ரூபாய் வரை விலையுள்ளன. தற்போது இதன் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. பங்கனப்பள்ளி, செந்தூரம் ஆகிய மாங்காய் ரகங்கள் கிலோவுக்கு, 120 - -135 ரூபாய் வரை விலை உள்ளன. தோத்தாபுரி என்ற கிளிமூக்கு மாங்காய் கிலோ 85 ரூபாய்; மூவண்டன் என்ற மாங்காய் கிலோ 65 ரூபாய் வரை விலை உள்ளது.
முதலமடை மாந்தோப்புகளில், 30க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வரும் நாட்களில் டில்லி, இந்துார், மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
மாமரங்களில் பூக்கள் அதிகம் பூத்திருந்தாலும், திடீரென காலநிலை மாறுவது உற்பத்தியை பாதிக்கிறது. அடிக்கடி பெய்யும் மழையினால் பூ உதிர்கிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.