ADDED : அக் 26, 2024 01:05 AM
இம்பால் : மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி, மெய்டி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று இங்குள்ள இம்பால் கிழக்கு, தவ்பால், சாந்தேல் மாவட்டங்களில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், ஏராளமான ஆயுதங்கள் சிக்கின.
இம்பால் கிழக்கில் உள்ள லெய்ராங் வைபே கிராமத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் கையெறி குண்டுகள், டெட்டனேட்டர், ஒயர்லெஸ் ரேடியோ செட், 2.5 கிலோ வெடி பொருள், இரு துப்பாக்கிகள், இரட்டை குழல் துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தவ்பால் மாவட்டத்தின் பிபைனோம் கிராமத்தில் கையெறி குண்டு, இரண்டு ரேடியோ செட்கள், கண்ணீர் புகை குண்டுகள், இரு வேறு ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாந்தேல் மாவட்டத்தின் சாங்கோம் மற்றும் குன்ஜில் கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனையில், தானியங்கி துப்பாக்கி, சிறு பீரங்கி குண்டுகள் மற்றும் இரு ரேடியோ செட்கள், ஒற்றை குழல் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.