மணிப்பூரில் மீண்டும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்!
மணிப்பூரில் மீண்டும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்!
ADDED : மார் 30, 2025 06:44 PM

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 13 காவல்நிலைய பகுதிகளை தவிர, மற்ற இடங்களில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்கள் இடையே மூண்ட வன்முறை சம்பவங்கள் நீட்சியாக அங்கு சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்தது. வன்முறைகள் தொடர்ந்து நீடித்த நிலையில் பிப்.13ல் முதல்வர் பைரேன் சிங் பதவி விலகினார்.
இதை அடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஏப்.1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் அங்கு 5 மாவட்டங்களில் உள்ள 13 காவல் நிலைய பகுதிகளை தவிர மாநிலத்தின் மற்ற இடங்களில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. மேலும், அந்த உத்தரவில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் திராப், சங்லாங், லாங்டிங் ஆகிய மாவட்டங்களிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, நாகலாந்து மாநிலத்தில் 8 மாவட்டங்கள், 5 மாவட்டங்களுக்கு உள்பட 21 காவல்நிலைய பகுதிகளிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது ராணுவத்திற்கு அதிகப்படியான அதிகாரங்கள் அளிப்பதாகும். கைது செய்ய, சுட்டுக் கொல்ல மற்றும் சொத்துகளை அழிக்கவோ உரிமை தருகிறது.
மேலும் மத்திய அரசின் முன் அனுமதியின்றி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வீரர்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.