அரசியல் லாபத்திற்காக மணிப்பூர் விவகாரம்; காங்கிரஸ் மீது நட்டா குற்றச்சாட்டு
அரசியல் லாபத்திற்காக மணிப்பூர் விவகாரம்; காங்கிரஸ் மீது நட்டா குற்றச்சாட்டு
UPDATED : நவ 22, 2024 02:27 PM
ADDED : நவ 22, 2024 10:38 AM

புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்களையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
மணிப்பூரில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர். இதனால், அங்கு கூடுதலாக 5,000 ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'மணிப்பூரில் மக்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க அம்மாநில அரசும், மத்திய அரசும் தவறிவிட்டது. அங்கு மக்கள் கண்ணியத்துடனும், அமைதியாக வாழ்வதையும் உறுதி செய்ய ஜனாதிபதி தலையிட வேண்டும்,' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற முறையில் உடனடியாக மணிப்பூர் பிரச்சினையில் தலையிடுவது கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், கார்கேவின் கடிதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கும் போது, அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததே, காங்கிரஸ் கட்சியினர் மரியாதை குறைவாகவும், பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்கு சாட்சியாகும். ஜனாதிபதி குறித்து பல்வேறு விமர்சனங்களை செய்து விட்டு, தற்போது அவருக்கே நீங்கள் கடிதம் எழுதியிருப்பது என்னை வியக்க வைத்துள்ளது. ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போது, உங்களின் பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, தவறான உத்திகள் மற்றும் அரசு இயந்திரங்களின் தோல்வியால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதை உங்கள் கட்சியினர் மறந்து விட்டார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம், கல்வியில் வளர்ச்சியடைந்திருக்கிறது. துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல் என எப்போதும் நிகழ்ந்து கொண்டிருந்த வடகிழக்கு மாநிலங்களில் தற்போது, அமைதி, வளர்ச்சி பாதையில், சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக திரும்பியுள்ளது.
மணிப்பூரில் மட்டும் கடந்த 2013ம் தேதி 20 சதவீதமாக இருந்த வறுமை, கடந்த 2022ல் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை இப்போதும் ஏற்றுக் கொள்ளாத நீங்களும், உங்கள் கட்சியினரும், வடகிழக்கு மாநிலங்களையும், மக்களையும் உங்களில் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறீர்கள். 1990 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை நினைவு படுத்த விரும்புகிறேன். அதேபோல, 2011ல் பிற மாநிலங்களைக் காட்டிலும் மணிப்பூரில் 4 முறை கேஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இந்த பிரச்னைகளை தீர்க்க காங்கிரஸ் தவறி விட்டது.
ஆனால், தற்போது, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மத்திய அரசு முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது. இப்படி பட்ட சூழலில், மீண்டும், மீண்டும் மணிப்பூர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வது தான் அதிர்ச்சியளிக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.