மணிப்பூர் கலவர வழக்குகள் அசாம் நீதிமன்றத்துக்கு மாற்றம்
மணிப்பூர் கலவர வழக்குகள் அசாம் நீதிமன்றத்துக்கு மாற்றம்
ADDED : டிச 01, 2024 05:03 AM

குவஹாத்தி: மணிப்பூரில் நடந்த சில கலவர வழக்குகள், குண்டு வெடிப்பு வழக்குகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அசாமின் குவஹாத்தியில் உள்ள, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை உள்ளது.
கடந்தாண்டு, மே மாதம் துவங்கி, இரு தரப்புக்கும் இடையே மோதல்கள், வன்முறைகள் நடந்து வருகின்றன. இந்த சம்பவங்களில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூரில் நடந்த சில வன்முறை சம்பவங்கள், ஆயுதக் கொள்ளை மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்குகள், மணிப்பூரின் இம்பாலில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து அசாமின் குவஹாத்தில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்குகள் மாற்றப்பட்டு உள்ளன.
மெய்டி சமூகத்தினரின் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆரம்பாய் தெங்கோல் என்ற பிரிவின் தலைவர் கோரோவ் நுகாம்பா குமான் மற்றும் கூகி சமூகத்தினரின் ஆயுதப் பிரிவுகள் தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு, நவம்பரில் ஆரம்பாய் தெங்கோல் பிரிவினர், மணிப்பூர் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப் பிரிவின் அலுவலகத்தில் நுழைந்து ஆயுதங்களை கொள்ளை அடித்தது, துணை ராணுவப் படையான இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் மீது தாக்குதல் நடத்தியது, குண்டு வெடிப்பு தாக்குதல் போன்றவை தொடர்பான வழக்குகள் தற்போது அசாம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.