ADDED : ஏப் 25, 2024 05:41 AM

ராம்நகர் : ''பெங்களூரு ரூரலில் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி பெற்றால், மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும்,'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா சூசகமாக தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று முன்தினம் பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளரும், தனது மருமகனுமான மஞ்சுநாத்தை ஆதரித்து, முன்னாள் பிரதமர் தேகவுடா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத், தனது மருத்துவ வாழ்க்கையில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான ஆப்பரேஷன்களை செய்து, ஏழைகளுக்கு உதவி உள்ளார். இதனால் தேசிய தலைவர்கள், அவரை தங்கள் அமைச்சரவையில் சேர்க்க விரும்புகின்றனர். இங்குள்ள மக்கள், மஞ்சுநாத்துக்கு ஓட்டுப்பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
மஞ்சுநாத்தின் பலத்தை அறிந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பெங்களூரு ரூரலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டனர். மஞ்சுநாத்தின் சேவை, தேசிய அளவில் தேவை என பா.ஜ., தலைவர்கள் என்னிடம் கூறியதால், மஞ்சுநாத் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
பெங்களூரு ஜெயதேவா இதய மருத்துவமனையில் 16 ஆண்டுகள் இயக்குனராக பணியாற்றியவர் டாக்டர் மஞ்சுநாத். அவரின் சேவையை பாராட்டி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரின் பணிக் காலத்தை நீட்டித்தார். அதன் பின், இம்மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கையை அதிகரித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை அகற்றும் வரை ஓயமாட்டேன். மே 5ம் தேதி வரை கர்நாடகா முழுதும் பயணம் செய்து ஓட்டுக் கேட்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

