ADDED : ஆக 11, 2011 11:23 PM
புதுடில்லி: வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியை விடுவிப்பது தொடர்பாக, குழப்பமான தகவலை தெரிவித்ததால், ராஜ்யசபாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது காலில் சிஷ்டி. மிகவும் வயதான இவர், 1992ல், ராஜஸ்தானுக்கு வந்திருந்தபோது, கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார். இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், எழுந்து நடமாட முடியாத அளவுக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.சக்கர நாற்காலியில் தான், அவர் எங்கும் செல்ல முடியும். 'மனிதாபிமான ரீதியில்,
இவரை விடுவிக்க வேண்டும்' என, பாக்., அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, இது தொடர்பாக பிரதமரிடம், தனிப்பட்ட முறையில், வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதுகுறித்து, ராஜ்யசபாவில் நேற்று ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் சிவானந்த் திவாரி கேள்வி எழுப்பினார். இதற்கு வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பதில் அளிக்கையில், ''குறிப்பிட்ட அந்த நபர், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில், அவரை விடுவிக்க, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, தூதரக அளவில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.இதைத் தொடர்ந்து, சபையில் பெரும் பரபரப்பும், கூச்சலும் நிலவியது. கிருஷ்ணா பதிலால், ஆச்சர்யம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ''எந்த நாட்டில் உள்ள கைதியைப் பற்றி, கிருஷ்ணா கூறுகிறார்,'' என, சத்தமிட்டனர்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தா கராத், ''கேள்வியை, அமைச்சர் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என, நினைக்கிறேன். அதனால், யாரைப் பற்றியோ அவர் கூறுகிறார்,'' என்றார்.
இதை கவனித்த, பிரதமர் மன்மோகன் சிங், வேகமாக எழுந்து, பதில் அளிக்கத் துவங்கினார். அவர் கூறுகையில், 'சிஷ்டியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தவுடன், உள்துறை அமைச்சரிடம் ஆலோசித்தேன். இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநில அரசுடன் அவர் பேசி வருகிறார். இதற்கு அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல், இன்னும் கிடைக்கவில்லை' என்றார்.வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, ஏற்கனவே ஒருமுறை ஐ.நா., சபையில், தனது உரைக்கு பதிலாக, போர்ச்சுகீசிய வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கையைப் படித்து, சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.