ADDED : டிச 06, 2024 02:15 AM

புதுடில்லி,டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மன்மோகன், 61, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றார்.
டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மன்மோகனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த 28ம் தேதி பரிந்துரைத்தது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, கடந்த 3ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நீதிபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் வாயிலாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
டில்லி பல்கலை வளாக சட்ட மையத்தில் சட்டம் படித்த மன்மோகன், 1987ல் வழக்கறிஞரானார்.
கடந்த 2008 முதல் டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், டில்லி உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
பின், கடந்த செப்., 29 முதல் தலைமை நீதிபதியாக மன்மோகன் அங்கு பணியாற்றி வந்தார். இவர், ஜம்மு - காஷ்மீர் கவர்னராகவும், டில்லி துணைநிலை கவர்னராகவும் இருந்த மறைந்த ஜக்மோகனின் மகன்.