ADDED : டிச 27, 2024 02:03 AM
இந்திய பொருளாதார புரட்சிக்கு வித்திட்டவர் மன்மோகன் சிங். இரண்டு முறை பிரதமராக இருந்த இவர், 'அமைதி புயலாக' பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
பொருளாதார மேதையான இவர், பேராசிரியர், அரசு துறைகளில் உயர் பதவிகள், ரிசர்வ் வங்கி கவர்னர், நாட்டின் பொருளாதார ஆலோசகர் பல உயர் பதவிகளை வகித்தார். 1991ல் இந்தியா பொருளாதார சிக்கலை சந்தித்தது. இதை நிவர்த்தி செய்வதற்காக அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், மன்மோகனை நிதியமைச்சராக்கினார். 1991ல் பட்ஜெட் தாக்கல் செய்த இவர், பொருளாதாரத்தில் தாராளமயமாக்கலை கொண்டு வந்தார். அந்திய முதலீட்டை அதிகபடுத்தியது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் செய்தது போன்ற சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மத்திய நிதியமைச்சர், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பல பதவிகளை வகித்த இவருக்கு 2004ல் பிரதமர் பதவி தேடி வந்தது. 2004 ----- 2014 வரை காங்., தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில், பத்தாண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.
சீக்கிய மதத்தை சேர்ந்த, முதல் பிரதமர். நேருவுக்கு பின் ஐந்தாண்டுகள் முழுமையாக பதவி வகித்து, இரண்டாவது முறையாக பிரதமரானவர். ராஜ்யசபா எம்.பி., மூலம் பிரதமரானவர் என பல சிறப்புகளை பெற்றவர். நீண்டகால பிரதமர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். பல உயரிய பதவிகளை வகித்தாலும் வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்தார்.

