மன்மோகன் சிங் இறுதி சடங்குகள் இன்று!: முழு அரசு மரியாதையுடன் நடக்கும் தொடர்ந்து குவியும் இரங்கல்கள்
மன்மோகன் சிங் இறுதி சடங்குகள் இன்று!: முழு அரசு மரியாதையுடன் நடக்கும் தொடர்ந்து குவியும் இரங்கல்கள்
ADDED : டிச 28, 2024 12:11 AM
புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சரவை, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அவருடைய இறுதிச்சடங்குகள், டில்லியில் இன்று காலையில் நடக்க உள்ளன.
காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 92, உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு காலமானார்.
நாட்டின் பொருளாதார சிற்பியான மன்மோகன் சிங், நிதியமைச்சராக 1990களில் கொண்டு வந்த தாராளமயமாக்கலே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
எதிர்பாராமல் பிரதமரானவர், அதிகம் பேசாதவர், தன் அமைச்சர்களின் ஊழல்களை கண்டும் காணாமல் இருந்தவர் என, பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில், எவ்வித அப்பழுக்கும் இல்லாத, பல தலைமுறைகளில் நாம் காணாத அபூர்வமான அரசியல் தலைவராக அவர் விளங்கினார்.
பெரிய மக்கள் தலைவராக, செல்வாக்கு மிக்க தலைவராக இல்லாதபோதும், அவருடைய மறைவுக்கு நாடு முழுதும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லியில் உள்ள மன்மோகன் சிங் வீட்டுக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் என, பலரும் அஞ்சலி செலுத்தினர்.
கட்சி பேதமில்லாமல் பல தலைவர்களும், மன்மோகன் சிங்குக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், மறைந்த தலைவருக்கு, இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசின் சார்பிலும், நாட்டு மக்களின் சார்பிலும் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'அவருடைய மறைவால், நம் நாடு மிகச்சிறந்த பொருளாதார மேதையை, உயர் குணங்கள் உள்ள தலைவரை இழந்துள்ளது. அவர் நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்' என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஏழு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும். இந்த நாட்களில், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.
வெளிநாடுகளில் உள்ள துாதரகங்களிலும், நம் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புகளுக்கு அரைநாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றிய மறைந்த தலைவருக்கு, முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியின் மோதிலால் நேரு தெருவில் உள்ள அரசு பங்களாவில், மன்மோகன் சிங் உடல் நேற்று வைக்கப்பட்டிருந்தது. பல தலைவர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவருடைய உடல், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 8:00 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கட்சியினர் மரியாதை செலுத்துவதற்கு வைக்கப்படும் என, கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.