நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்: எமர்ஜென்சி பற்றி 'மன் கி பாத்' உரையில் மோடி காட்டம்
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்: எமர்ஜென்சி பற்றி 'மன் கி பாத்' உரையில் மோடி காட்டம்
UPDATED : ஜூன் 29, 2025 01:24 PM
ADDED : ஜூன் 29, 2025 12:05 PM

புதுடில்லி: ''நாட்டில் எமர்ஜென்சியை அமல் செய்தவர்கள், அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர்,'' என்று, 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசினார்.
மன் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் சர்வதேச யோகா தினம் நினைவுகள் இருக்கும். இந்திய கடற்படையின் கப்பல்களிலும் பிரமாண்ட முறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. டில்லி யமுனை நதிக்கரையில் மக்கள் யோகா செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் மக்கள் யோகா செய்தனர்.
யோகா
இமயமலையின் பனி சிகரங்களில் பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி செய்தனர். அதிகாரம் அளிப்பதற்கான ஒரு வழி யோகா. புனித யாத்திரைகள் உடலை ஒழுங்குப்படுத்துவதற்கும், மனதை தூய்மைப் படுத்துவதற்கும், அன்பையும், சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒரு சிறந்த வழியை உருவாக்கும். நாட்டில் எமர்ஜென்சியை அமல் செய்தவர்கள், அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர்.
எமர்ஜென்சி
எமர்ஜென்சியை துணிச்சலுடன் எதிர்த்து போராடியவர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் பெரிதும் சித்ரவதை செய்யப்பட்டனர். இன்று நாட்டின் 95 கோடி பேர் ஏதேனும், ஒரு சமூக நலன் பாதுகாப்பு திட்டத்தால் பயன் அடைகின்றனர். உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நமது அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வரலாற்று சாதனை
இந்த நேரத்தில் அனைவரது பார்வையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது உள்ளது. இந்தியா ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பேசினேன்.இன்னும் சில நாட்கள் சுக்லா விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த திட்டம் குறித்து அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சியில் விரிவாக பேசுவோம்.
முன் மாதிரி
மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமம் முன்மாதிரியாக அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் யாரும் குப்பைகளை சாலைகளில் வீசுவதில்லை. எந்த கழிவுநீரும் இயந்திரம் சுத்தகரிப்பு செய்யாமல் ஆற்றில் கலக்கப்படாது. இந்த கிராமத்தில் கடைபிடிக்கப்படும் முறைகள் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த கிராமம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சோளம் ரொட்டி
ஜூலை 1ம் தேதி நமது சுகாதாரத்தை பேணிக்காக்கும் டாக்டர்களையும், நமது பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் பட்டய கணக்காளர்களையும் நாம் கவுரவிக்க வேண்டியது மிகவும் அவசியம். கர்நாடகாவில் உள்ள கலபுர்கி பெண்கள் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் சோளம் ரொட்டியை ஒரு பிராண்டாக மாற்றியுள்ளனர். ஒவ்வொரு நாளும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
வெற்றி
டிராக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு தொற்று நோய். ஒரு காலத்தில் இந்த நோயால் இந்தியாவில் பல பகுதிகளில் வசித்த மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்த முற்றிலுமாக அழிக்க தீர்மானித்தோம். தற்போது இந்தியாவை உலக சுகாதார நிறுவனம்
டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது. இது நமது சுகாதார ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.