கோவில்கள், மடங்களுக்கு சுதந்திரம் மந்த்ராலயா மடாதிபதி எதிர்பார்ப்பு
கோவில்கள், மடங்களுக்கு சுதந்திரம் மந்த்ராலயா மடாதிபதி எதிர்பார்ப்பு
ADDED : செப் 23, 2024 11:00 PM

ராய்ச்சூர்: “ஹிந்து அறநிலையத் துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்து, கோவில்கள், மடங்களை விடுவிக்க வேண்டும்,” என, மந்த்ராலயா மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம் மந்த்ராலயா மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், ராய்ச்சூரில் நேற்று அளித்த பேட்டி:
ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து மடங்கள், கோவில்களை விடுவிக்க வேண்டும். இவை, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தட்டும்.
மடங்கள், கோவில்கள் அந்தந்த பகுதி பக்தர்களின் சம்பிரதாயம் சம்பந்தப்பட்ட வழிபாடு தலங்கள். மாநிலம் அல்லது தேசிய தலைநகரில் அமர்ந்து கொண்டு, கோவில்கள், மடங்களை நிர்வகிக்க முடியாது.
கோவில்கள், மடங்களின் விஷயத்தில் அரசு தலையிட கூடாது. சம்பிரதாயங்களை மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை.
எனவே அனைத்து மாநிலங்களின் கோவில்கள், மடங்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
அம்பேத்கர் நமக்கு அரசியல் சாசனத்தை அளித்துள்ளார். அந்த புனித சாசனத்தில், கோவில்கள், மடங்களை கட்டுப்படுத்த அனுமதி அளிக்கவில்லை. ஏதாவது இருந்தால் மட்டுமே அரசு விசாரணை நடத்தலாம்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், லட்டு பிரசாதம் தயாரிக்க, கலப்பட நெய் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அரசு விசாரணை நடத்த வேண்டும். யாரால் தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
மந்த்ராலயாவில் பிரசாதம் தயாரிக்க, ஆந்திராவின், கர்னுால் மாவட்டத்தின் விஜயா டெய்ரியில் இருந்து, நெய் வரவழைக்கிறோம். இதற்கு முன்பு நந்தினி நெய் வாங்கினோம். அங்கிருந்து சப்ளையாக, இரண்டு மாநிலங்களை கடந்து வர வேண்டும். எனவே விஜயா டெய்ரியில் இருந்து வரவழைக்கிறோம்.
எப்.சி.ஐ.,யின் உரிமம் உள்ள நெய் மட்டுமே வரவழைக்கிறோம். லேப் அறிக்கையும் பெற்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில், 1.80 லட்சம் கோவில்கள் உள்ளன. இவற்றில் 34,000 கோவில்கள் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. இன்று, நேற்று அல்ல ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இதே நடைமுறை உள்ளது. மடங்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லை. கோவில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து, மாநில அரசு முடிவு செய்ய முடியாது. இது பற்றி மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும்.
ராமலிங்கரெட்டி,கர்நாடக அமைச்சர்,
ஹிந்து அறநிலையத் துறை