ஆடம்பர திருமணம் வேண்டாம்; மராத்தா சமூக தலைவர்கள் முடிவு
ஆடம்பர திருமணம் வேண்டாம்; மராத்தா சமூக தலைவர்கள் முடிவு
ADDED : மே 28, 2025 03:58 AM

புனே : மஹாராஷ்டிராவில் நடந்த திருமணங்களுக்கான நடத்தை விதி கூட்டத்தில், 'திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும்; ஆடம்பர விழாக்கள் வேண்டவே வேண்டாம்' என, முடிவு செய்யப்பட்டது.
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்த ராஜேந்திர ஹகவானே என்பவரின் மருமகள் வைஷ்ணவி, வரதட்சணை கொடுமை காரணமாக கடந்த 16ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ராஜேந்திர ஹகவானே, மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்.
வரதட்சணை
தேசியவாத காங்., தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் முன்னிலையில், கடந்தாண்டு நடந்த திருமணத்தின் போது 595 கிராம் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் சொகுசு கார் வரதட்சணையாக வழங்கப்பட்ட நிலையில், மேலும் 2 கோடி ரூபாய் கேட்டு துன்புறுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, ராஜேந்திர ஹகவானே மற்றும் அவரது மகன் சுஷில் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ராஜேந்திர ஹகவானே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
வரதட்சணை விவகாரத்தில் வைஷ்ணவி தற்கொலை செய்த சம்பவம் மராத்தா சமூக தலைவர்களிடையே புயலை கிளப்பியது.
'ஆடம்பரமாக நடத்தப்படும் விழாக்களால் எந்த உபயோகமும் இல்லை' என, மராத்தா சமூக தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக முடிவெடுக்கவும், திருமண நடத்தை விதிகளை ஏற்படுத்தவும் மஹா.,வில் உள்ள மராத்தா சமூகத்தின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
அப்போது, 'ஆடம்பர திருமணங்களைத் தவிர்த்து, எளிமையான திருமண நிகழ்வுகளை ஊக்குவிக்க வேண்டும். மாமியார் - மருமகள் உறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புறக்கணிப்பு
இது குறித்து காங்.,கின் அரவிந்த் ஷிண்டே கூறுகையில், ''ஆடம்பர திருமணங்களால் உயிரிழப்பு ஏற்படுவது கவலையளிக்கிறது. எனவே, எளிய முறை திருமணங்களை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருமகள்களை புறக்கணிக்கும் குடும்பங்களை சமூக ரீதியாக புறக்கணிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தகைய குடும்பங்களுடன் யாரும் திருமண உறவை ஏற்படுத்தக்கூடாது.
''அப்போதுதான், வைஷ்ணவியின் மரணம் போன்ற சம்பவங்கள் நடக்காது. நடுத்தர வர்க்க குடும்பங்கள், பணக்காரர்களின் ஆடம்பர திருமண விழாக்களை பின்பற்றுகின்றன.
''இதன் விளைவாக கடன் உள்ளிட்ட நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகத்தினர் முன்வர வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற பிற தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். இயற்றப்பட்ட தீர்மானங்களை மஹாராஷ்டிரா அரசுக்கு அனுப்பி வைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.