மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் ஊரடங்கு உத்தரவால் பதற்றம்
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் ஊரடங்கு உத்தரவால் பதற்றம்
ADDED : பிப் 26, 2024 11:43 PM
சத்ரபதி சம்பாஜிநகர்: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த சில ஆண்டுகளாக அந்த சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் ஜராங்கே போராட்டம் நடத்தி வருகிறார்.
அவரின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, கடந்த வாரம் கூடிய சட்டசபை கூட்டத்தொடரில், மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், மராத்தா சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மனோஜ் மீண்டும் போராட்டத்தை நடத்தி வருகிறார். மும்பையை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளார்.
போராட்டம் காரணமாக, துலே - மும்பை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டம் நடக்கும் ஜல்னா, சத்ரபதி சம்பாஜி நகர், பீட் ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் வெளி ஆட்கள் நுழைய முடியாதபடி சீலிடப்பட்டன. இந்த மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று துண்டிக்கப்பட்டது.
அதேபோல் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஜல்னா மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையே, கடந்த 17 நாட்களாக மேற் கொண்டிருந்த உண்ணா விரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மனோஜ் ஜராங்கே நேற்று அறிவித்தார். ஆனாலும் தன் ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
