பெலகாவி மாநகராட்சியில் மராத்தி மேயர் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் 'ஆப்சென்ட்'
பெலகாவி மாநகராட்சியில் மராத்தி மேயர் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 15, 2025 11:32 PM

பெலகாவி: பெலகாவி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவியை, பா.ஜ., தக்கவைத்துக் கொண்டது.
கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லை மாவட்டமான பெலகாவி மாநகராட்சியில், மொத்தம் 58 வார்டுகள் உள்ளன. இதில், பா.ஜ., 35, காங்கிரஸ் 10, ஏ.ஐ.எம்.ஐ.எம்., 1, சுயேச்சைகள் 12 பேர் உள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு
கடந்த 2024 - 25ம் ஆண்டுக்கான மேயர், துணை மேயர் பதவிகளின் காலம், பிப்., 15ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய மேயர், துணை மேயர் பதவிக்கான தேர்தல் நேற்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேயர் பதவி 'பொது' பிரிவுக்கும்; துணை மேயர் பதவி 'பொது பெண்கள்' பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டியிருந்தது.
நேற்று காலை மாநகராட்சி அரங்கில், மண்டல கமிஷனர் சேத்தன் தலைமையில் தேர்தல் பணிகள் துவங்கின. மேயர் பதவிக்கு பா.ஜ.,வின் மங்கேஷ் பவார், காங்கிரசின் ராஜு பட்கண்டே, சுயேச்சை பசவராஜ், ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஷாஹித் கான் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இரண்டு நிமிடங்களுக்கு பின், காங்கிரசின் ராஜு பட்கண்டே, ஏ.ஐ.எம்.ஐ.எம்.,மைச் சேர்ந்த ஷாஹித் கான் ஆகிய இருவரும் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
அதேபோல துணை மேயர் பதவிக்கு பா.ஜ.,வின் வாணி விலாஸ் ஜோஷி, காங்கிரசின் தீபாளி டோபகி, சுயேச்சைகள் குர்ஷித் முல்லா, லட்சுமி லோகரி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இரண்டு நிமிடங்களுக்கு பின், காங்கிரசின் தீபாளி டோபகி, சுயேச்சை குர்ஷித் முல்லா வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
மேயர், துணை மேயர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிட்டதால், தேர்தல் நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் கையை உயர்த்தி, ஆதரவை தெரிவித்தனர்.
இதில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.,வின் மங்கேஷ் பவார் 40 ஓட்டுகளும்; சுயேச்சை பசவராஜு 20 ஓட்டுகளும் பெற்றனர். மங்கேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பா.ஜ., வெற்றி
துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட வாணி விலாஸ் ஜோஷி 40 ஓட்டுகளும்; சுயேச்சை லட்சுமி லோகரி 20 ஓட்டுகளும் பெற்றனர். வாணி விலாஸ் ஜோஷி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பா.ஜ., வேட்பாளர்கள் கூடுதல் ஓட்டு பெற்றுள்ளனர். அவர்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர். மேயர் மராத்தி; துணை மேயர் கன்னடர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.,வில் எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர், எம்.எல்.ஏ., அபய் பாட்டீல், எம்.எல்.சி.,க்கள் சாபண்ணா தல்வாரா, ரவிகுமார் ஆகியோர் வந்திருந்தனர். ஆனால், காங்கிரசின் அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர், எம்.பி., பிரியங்கா, எம்.எல்.ஏ., ஆசிப் சேத் ஆகியோர் வரவில்லை.
மேயர் மங்கேஷ் பவார் கூறுகையில், ''எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர், எம்.எல்.ஏ., அபய் பாட்டீல், எம்.எல்.சி.,க்கள் சாபண்ணா தல்வாரா, ரவிகுமார் கவுன்சிலர்களுக்கு நன்றி. பெலகாவி நகர மேம்பாட்டுக்கு, அனைத்து கவுன்சிலர்களையும் ஒருங்கிணைத்து, மாநகராட்சியை வழிநடத்துவேன். மாநகராட்சி வார்டுகளில் உள்ள குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.
தேர்தல் என்றால் போட்டி இருக்கும். தேர்தலுக்கு பின், அனைவரும் ஒற்றுமையாக, பெலகாவி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். புதிய மேயர், துணை மேயருக்கு வாழ்த்துக்கள்.
- ஜெகதீஷ் ஷெட்டர்,
பா.ஜ., - எம்.பி., பெலகாவி
மக்கள் பிரதிநிதிகள் போன்று அதிகாரிகள் பணியாற்ற கூடாது. பெலகாவி மேம்பாட்டுக்கான பாதையில் 58 கவுன்சிலர்களும் பணியாற்ற வேண்டும். மங்கேஷ் பவாருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதை மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- அபய் பாட்டீல்,
பா.ஜ., - எம்.எல்.ஏ., பெலகாவி