மாரத்தான் வீரர் பவுஜா சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
மாரத்தான் வீரர் பவுஜா சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
ADDED : ஜூலை 20, 2025 10:48 PM

ஜலந்தர்:உலகின் மிக வயதான, மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங்,114, உடல் ஜலந்தர் நகரில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, பவுஜா சிங், 'டர்பனட் டொர்னாடோ' என அழைக்கப்பட்ட, உலகின் வயதான மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் பவுஜா சிங் கடந்த, 14ம் தேதி கார் மோதி உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் ஜலந்தர் அருகே பியாஸ் கிராமத்தில் நேற்று நடந்தது.
பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் சிங், அமைச்சர் மொஹிந்தர் பகத் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்று, இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பவுஜா சிங் மகன் ஹர்விந்தர் சிங் இறுதிச் சடங்குளை நிறைவேற்றினார்.
நேற்று அதிகாலையில் இருந்தே, பவுஜா சிங் வீட்டுக்கு மக்கள் குவியத் துவங்கினர்.
நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். மக்கள் பார்க்கும் வகையில், பவுஜா சிங் உடல் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி முடித்தவுடன், இறுதி ஊர்வலம் துவங்கியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பர்கத் சிங், ராணா குர்ஜித் சிங், சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன், நடந்த புகழஞ்சலி கூட்டத்தில், கடந்த ஆண்டு போதைப்பொருள் எதிர்ப்பு பிரசார பாதயாத்திரையில் பவுஜா சிங் தன்னுடன் ஒரு கி.மீ., தூரம் நடந்து வந்ததை கவர்னர் கட்டாரியா நினைவு கூர்ந்தார். பின், முழு அரசு மரியாதையுடன் பவுஜா சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.
தன், எட்டு வயதில் ஓடத் துவங்கிய பவுஜா சிங், மாரத்தான் ஓட்டத்தில் உலக அளவில் முத்திரை பதித்தார்.
அவரது சகிப்புத்தன்மை மற்றும் விளையாட்டுத் திறனுக்காக, 'டர்பனட் டொர்னாடோ' என அழைக்கப்பட்டார். மாரத்தான் ஓட்டத்தில் நுாற்றாண்டு கண்ட முதல் வீரர் என்ற பெருமையும் அடைந்தவர்.