டில்லியை நோக்கி பேரணி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
டில்லியை நோக்கி பேரணி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
ADDED : டிச 06, 2024 04:02 PM

புதுடில்லி: ஹரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் இருந்து டில்லியை நோக்கி தடையை மீறி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் இரண்டு விவசாயிகள் காயமடைந்தனர்.
வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டபூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் மின்சார கட்டண உயர்வில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டில்லியை நோக்கி பேரணியை துவக்கினர். இவர்கள் டிராக்டர்களில் பஞ்சாப் - ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையில் வியாழக்கிழமை குவிந்தனர். அங்கிருந்து டில்லிக்கு கிளம்பினர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி விவசாயிகள் டில்லியை நோக்கி செல்ல முயன்றதைத் தொடர்ந்து, அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் இரண்டு விவசாயிகள் காயமடைந்தனர்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவசாயத்துறை இணை அமைச்சர் பகிரத் சவுத்ரி கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விவசாயிகளுக்கு கதவுகள் திறந்தே உள்ளன. நானும் அவர்களது சகோதரன் தான். அவர்கள் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் சரி, நாங்கள் அங்கு சென்று பேச வேண்டும் என விரும்பினாலும் சரி அதனை செய்வோம் என்றார்.
விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பார்லிமென்டில் கூறியதாவது: விவசாயிகளின் விளைபொருட்கள் அனைத்தும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளிக்கிறேன். இது தான் மோடி அரசின் முடிவு. அதனை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.