இந்திய தேர்தல் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் தவறான கருத்து: சிக்கலில் மெட்டா!
இந்திய தேர்தல் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் தவறான கருத்து: சிக்கலில் மெட்டா!
ADDED : ஜன 14, 2025 09:43 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் பற்றிய ஜுக்கர்பெர்க் கருத்தை தொடர்ந்து மெட்டாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்துக்கு பார்லி குழு சார்பில் சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகளவில் பெரும்பாலான அரசுகள் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டதாக மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியிருந்தார். அவரது பேட்டி ஒரு பெரிய அரசியல் சர்ச்சையைத் தூண்டியது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜுக்கர்பெர்க் கருத்து தவறு என்று சுட்டிக்காட்டினார். அதை தொடர்ந்து மெட்டா நிறுவனம் பார்லிமென்ட் குழு சம்மனை எதிர்நோக்கியுள்ளது.
இது குறித்து தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான பார்லி. நிலைக்குழுவின் தலைவரான பா.ஜ.,எம்.பி நிஷிகாந்த் துபே கூறியதாவது:, தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மெட்டா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தவறான தகவலுக்காக எனது குழு மெட்டாவை அழைக்கும். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் தவறான தகவல்கள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்.
இந்த தவறுக்காக அந்த அமைப்பு இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபலமான தளங்களை இயக்கும் மெட்டா, சர்ச்சைக்கு இன்னும் அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை.