'சான்றிதழ் இல்லாவிட்டாலும் திருமணம் செல்லுபடியாகும்'
'சான்றிதழ் இல்லாவிட்டாலும் திருமணம் செல்லுபடியாகும்'
ADDED : ஆக 31, 2025 01:51 AM

பிரயாக்ராஜ்: 'திருமண சான்றிதழ் இல்லாத காரணத்திற்காக அந்த திருமணம் செல்லுபடியாகாது என்று உத்தரவிட முடியாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு அஸம்கரில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான சான்றாக, திருமண பதிவு சான்றிதழை சமர்பிக்கும்படி கேட்டார்.
திருமணத்தை பதிவு செய்ய தவறியதால், சான்றிதழை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், ஹிந்து திருமண சட்டத்தின்படி திருமண சான்றிதழ் அவசியம் இல்லை எனவும், இருதரப்பிலும் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, அவர்களது விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்து, நீதிபதி மணிஷ் நிகாம் அளித்த தீர்ப்பு:
திருமணத்தை பதிவு செய்ய தவறியதற்காக, அந்த திருமணம் முறைப்படி நடந்த திருமணம் அல்ல என கூறி விட முடியாது. திருமணத்தை பதிவு செய்து, அதற்கான சான்றிதழை பெறுவது என்பது ஒரு நடைமுறை தான்.
அதற்காக சான்றிதழ் இல்லாததால், அந்த திருமணம் செல்லுபடியாகாது என, ஹிந்து திருமணச் சட்டத்தில் கூறப்படவில்லை. இதை பல்வேறு உயர் நீதிமன்றங்களும், ஏன் உச்ச நீதிமன்றமும் கூட உறுதி செய்திருக்கிறது.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.