குடிகார கணவர்கள் கொடுமை: திருமணம் முடித்த தோழியர்
குடிகார கணவர்கள் கொடுமை: திருமணம் முடித்த தோழியர்
ADDED : ஜன 26, 2025 01:16 AM

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில், குடிகார கணவர்களால் தினமும் சித்ரவதையை அனுபவித்த தோழியர் இருவரும் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உ.பி.,யில் உள்ள கோரக்பூரைச் சேர்ந்தவர் கவிதா. சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவருக்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன், 'இன்ஸ்டா' வாயிலாக குஞ்ஜா என்ற பெண் அறிமுகமானார். சம வயதுடைய இருவரும், மொபைல் போன் வாயிலாகவும் பேசி வந்தனர்.
அப்போது, குடிகாரரான தன் கணவர் நாள்தோறும் அடித்து சித்ரவதை செய்வது குறித்து தோழி குஞ்ஜாவுடன் கவிதா பகிர்ந்து கொண்டார். அவரும், இதேநிலையை அனுபவிப்பதாக கூறி, தன் கஷ்டங்களை கவிதாவிடம் கூறி புலம்பினார்.
இருவரும், குடிகார கணவர்களால் தங்களுக்கு ஏற்படும் அவலங்களை அடிக்கடி பகிர்ந்த சூழலில், நாம் ஏன் குடிகார கணவர்களுடன் வாழ வேண்டும் என விவாதிக்க துவங்கினர்.
கணவரை பிரிந்தபின் என்ன செய்வது என்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். முடிவில், கணவர்களை பிரிந்து திருமணம் செய்துகொள்ள கவிதா மற்றும் குஞ்ஜா முடிவு செய்தனர்.
உடனடியாக இதற்கான வேலைகளை துவங்கிய அவர்கள், வீட்டைவிட்டு வெளியேறி, தியோரியா நகரில் உள்ள சோட்டா காசி எனப்படும் சிவன் கோவிலில், மாலை மாற்றி நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதில், மணமகனாக மாறிய குஞ்ஜா, கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக்கி கொண்டார்.
இது குறித்து குஞ்ஜா கூறுகையில், “குடிகார கணவர்களால் சொல்ல முடியாத சித்ரவதையை அனுபவித்தோம். எனவே தான் அன்பு மற்றும் அமைதிக்காக புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துஉள்ளோம்,” என்றார்.