ADDED : நவ 07, 2024 01:47 AM

புதுடில்லி,
திருமண வரன் தேடும் இணையதளமான, 'பாரத் மேட்ரிமோனி'யில், போலி சுயவிபரத்தின் கீழ், திருமணமான பெண்ணின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில், திருமண வரன் தேடும் முன்னணி இணையதளமான பாரத் மேட்ரிமோனியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்த இணையதளத்தில், 'எலைட்' சந்தா வசதியும் உள்ளது; இதற்கு, 1.5 லட்சம் ரூபாய் கட்டணம். இந்த அம்சத்தின் கீழ், வரன் தேடும் ஆண், பெண்ணின் தகவல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்படும்.
இந்நிலையில், பாரத் மேட்ரிமோனி இணையதளத்தின், எலைட் சந்தா பிரிவில், போலி சுயவிபரத்தின் கீழ், திருமணமான பெண்ணின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், 2 லட்சத்துக்கும் மேல் பின்தொடர்வோரை வைத்திருக்கும் சுவாதி முகுந்த் என்ற பெண்ணின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுவாதி முகுந்த் கூறுகையில், “எனக்கு திருமணமாகி விட்டது. என் கணவரை எந்த மேட்ரிமோனி தளத்திலும் நான் சந்திக்கவில்லை. என் புகைப்படத்தை பாரத் மேட்ரிமோனி தவறாக பயன்படுத்தி உள்ளது. இது, அந்நிறுவனத்தின் ஊழல்; அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள்,” என்றார்.
இது குறித்து பாரத் மேட்ரிமோனி தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. 'பெரும்பாலான மேட்ரிமோனி தளங்கள் திருமணமானவர்களின் சுயவிபரங்களைப் பயன்படுத்துகின்றன' என, பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.