கொல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 3 தமிழர்கள் உட்பட 14 பேர் பரிதாப பலி
கொல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 3 தமிழர்கள் உட்பட 14 பேர் பரிதாப பலி
ADDED : மே 01, 2025 12:50 AM

கொல்கட்டா; மேற்கு வங்க ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில், புறநகர் பகுதியான மெச்சுவா என்ற வணிகப் பகுதியில் ரிதுராஜ் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. ஆறு மாடிகள் உடைய இந்த கட்டடத்தில் வாடிக்கையாளர்கள் தங்கியிருந்தனர்.
மூச்சுத்திணறல்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹோட்டலின் முதல் தளத்தில் தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாக மற்ற தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது.
இதனால், ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள், உணவருந்த வந்தவர்கள் என பலர் அலறியடித்தபடி வெளியேறினர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீ விபத்தில் இருந்து தப்பிக்க பலர், ஹோட்டலின் ஜன்னல் வழியாக குதிக்க முயன்றனர். இது போல் தப்ப முயன்ற 100க்கும் மேற்பட்டோரை, ஏணி உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் வாயிலாக தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை நேற்று காலை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். இதைத் தொடர்ந்து, கட்டடத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், தீயில் கருகியும் பலியானது தெரிய வந்தது. காயங்களுடன் மீட்கப்பட்ட 13 பேரை, அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
இந்த தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஜோதிவடத்தைச் சேர்ந்தவர் பிரபு, 40. இவர், கற்றாழையை பயன்படுத்தி வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
குற்றச்சாட்டு
இவர், தன் மனைவி மதுமிதா, மகள் தியா, 10, மகன் ரிதன், 3, மாமனார் முத்துகிருஷ்ணன், 61, ஆகியோருடன் கடந்த 18ம் தேதி டில்லியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்றார்.
அதன்பின், நேற்று முன்தினம் இரவு கொல்கட்டாவில் உள்ள ரிதுராஜ் ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கினார். விபத்தின்போது, ஹோட்டல் அறையில் இருந்த முத்துகிருஷ்ணன், அவரது பேரக்குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய மூன்று பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரவு உணவு வாங்க பிரபுவும், அவரது மனைவி மதுமிதாவும் வெளியே சென்றதால் உயிர் பிழைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான ஹோட்டலில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

