உ.பி.,யில் நடந்த திருமண மோசடி: அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது
உ.பி.,யில் நடந்த திருமண மோசடி: அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது
ADDED : பிப் 04, 2024 05:30 PM

லக்னோ: உ.பி., அரசின் உதவித்தொகையை பெறுவதற்காக போலி திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி., மாநிலம் பாலியா மாவட்டத்தில் எம்.எல்.ஏ., கேட்கி சிங் முன்னிலையில், ஜன.,25ம் தேதி 568 ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம் நடந்தது. இந்த கூட்டுத்திருமண நிகழ்வில் பங்கேற்கும் ஜோடிகளுக்கு ரூ.51 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும், சமூக வலைதளங்களில் வைரலான திருமண வீடியோக்கள் மூலம் மோசடி நடந்தது அம்பலமானது.
இந்த கூட்டுத்திருமண நிகழ்ச்சிக்கு போதிய ஜோடிகள் கிடைக்காததால், ஆண்கள் சிலர் மணமகள்கள் போல் முகத்தை மறைத்து ஆடையணிந்து வந்திருந்தது தெரியவந்தது. மேலும், திருமணமான பலரை பணம் கொடுத்து அழைத்து வந்து புதிய திருமண ஜோடிகள் போல் நடிக்க வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பல பெண்கள் ஜோடி இல்லாமல் அவர்களே மாலையை தாங்களே அணிந்து கொண்டதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.இந்த மோசடியை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை கைது செய்தனர்.
அரசு உயர் அதிகாரிகள், மோசடி தெரியவந்ததும் 3 பேர் கொண்ட அதிகாரிகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை யாருக்கும் நிதியுதவி அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.