ADDED : ஜன 22, 2024 05:59 AM
மங்களூரு: அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறக்கப்படுவதால் தட்சிண கன்னடா மங்களூரில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகல்வால் வெளியிட்ட அறிக்கை:
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கிறது. எனவே, மங்களூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளோம். கோவில்கள், வழிபாடு தலங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும், 196 இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மங்களூரின் 131 பதற்றமான இடங்களில், இரவு மற்றும் பகலில் ரோந்து நடக்கிறது. 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் குழுக்கள் அமைத்து, சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடக அரசின் உத்தரவுப்படி, மங்களூரிலும் எந்த விதமான ஊர்வலம், பேரணிகளுக்கு அனுமதியில்லை.
பிளக்ஸ் பேனர் பொருத்துவதை கண்காணிக்கிறோம். நாளை அதிகாலை வரை பார்கள், மதுபான கடைகளை மூடும்படி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மங்களூரு நகரின் பாதுகாப்புக்கு, மூன்று டி.சி.பி.,க்கள், ஆறு டி.சி.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 37 எஸ்.ஐ.,க்கள், 781 ஏட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.