ஊழல் புகாரில் சிக்கிய இரு அமைச்சர்கள் நீக்கம் : மாயாவதி அதிரடி
ஊழல் புகாரில் சிக்கிய இரு அமைச்சர்கள் நீக்கம் : மாயாவதி அதிரடி
UPDATED : அக் 06, 2011 01:25 AM
ADDED : அக் 05, 2011 10:16 PM

லக்னோ : ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான, மேலும் இரண்டு அமைச்சர்களை, உ.பி., முதல்வர் மாயாவதி, அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார்.
உ.பி.,யில் ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் லோக்ஆயுக்தாவின் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் குற்றச்சாட்டுக்கு ஆளான, கால்நடைத் துறை அமைச்சராக இருந்த அவத்பால் சிங் யாதவ், அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ராஜேஸ் திரிபாதி ஆகியோர், ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பாட்ஷா சிங் மீதும், லோக்ஆயுக்தா அமைப்பு குற்றச்சாட்டை சுமத்தியது. இவர், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ரங்கநாத் மிஸ்ரா மீதும், அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தாக குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கும் லோக்ஆயுக்தா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருவரையும் பதவி நீக்கம் செய்யும்படி, மாநில அரசுக்கு, லோக்ஆயுக்தா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரங்கநாத் மிஸ்ரா, பாட்ஷா சிங் ஆகிய இருவரையும், அதிரடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, முதல்வர் மாயாவதி நேற்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக, உ.பி., மாநில அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,'இந்த இரு அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில், இருவரும் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டால், மீண்டும் அமைச்சர் பதவியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

