அசாஞ்சை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும்: மாயாவதி பாய்ச்சல்
அசாஞ்சை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும்: மாயாவதி பாய்ச்சல்
ADDED : செப் 06, 2011 11:43 PM

லக்னோ: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பும்படி, உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, ஒரு ஜோடி செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு தனி விமானத்தை அனுப்பியதாகவும், சிறு தவறு செய்யும் அமைச்சர்கள் மற்றும் தன் கட்சி பிரமுகர்களை, தன் முன்னாலேயே தோப்புக் கரணம் போடச் செய்வார் என்றும், தன் வீட்டிலிருந்து அலுவலகம் வரை தனியாக சாலை போட்டுள்ளார் என்றும், அவர் அந்த சாலையில் செல்லும் முன், அதிகாரிகள் அந்த சாலையில் ஆஜராகி சாலையின் தூய்மையை கண்காணிப்பர் என்றும், விக்கிலீக்ஸ் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மாயாவதி கூறியதாவது: என்னுடைய எதிர்க்கட்சியினரின் பேச்சைக் கேட்டு, விக்கிலீக்ஸ் இணைய தளம் இது போன்ற செய்தியை வெளியிட்டுள்ளது. ஜூலியன் அசாஞ்ச் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ அந்த நாட்டு அரசு, அவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும். அந்த நாட்டில் உள்ள மருத்துவமனையில் இடம் இல்லையென்றால், ஆக்ராவில் உள்ள மனநல காப்பகத்தில் அவரைச் சேர்த்துக் கொள்கிறோம். வீக்கிலீக்சில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவலும் அடிப்படையில்லாதது. அரசின் புகழை குலைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டது. இதற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக செருப்பு வாங்க, எப்போது விமானம் மும்பைக்குச் சென்றது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அந்த விமானத்தில் பா.ஜ., தலைவரும்( முக்தார் அப்பாஸ் நக்வி) விக்கிலீக்ஸ் நிறுவனரும் மட்டும் பயணித்திருப்பார்கள் போலும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.